கோமா நிலையில் அ.தி.மு.க. ஆட்சி: தமிழ்மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது - மு.க.ஸ்டாலின் பேச்சு


கோமா நிலையில் அ.தி.மு.க. ஆட்சி: தமிழ்மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 21 July 2019 11:30 PM GMT (Updated: 21 July 2019 8:23 PM GMT)

‘கோமா நிலையில் அ.தி.மு.க. ஆட்சி உள்ளது என்றும், தமிழ்மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்றும் தேனி பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தேனி,

தேனி அருகே வீரபாண்டியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா மற்றும் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. இதற்காக, வீரபாண்டி புறவழிச்சாலையில் அண்ணா அறிவாலயம் போன்ற தோற்றத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

சென்னையில் இருக்கக்கூடிய அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வில் தங்கதமிழ்செல்வன் இணைந்தார். அவரோடு சேர்ந்து இன்றைக்கு ஆயிரக்கணக்கில் இங்கே அமைந்துள்ள இந்த அண்ணா அறிவாலயத்தில் நீங்கள் எல்லாம் வந்து சேர்ந்து இருக்கிறீர்கள். வரவேண்டிய இடத்துக்கு, வந்து சேர வேண்டிய இடத்துக்கு தான் வந்திருக்கிறீர்கள்.

இது ஒரு முக்கியமான காலக்கட்டம். தங்கதமிழ்செல்வன் பேசும் போது நம்முடைய மொழிக்கு, இனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை சுட்டிக் காட்டினார். நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது. அதை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு நாம் வந்து இருக்கிறோம்.

தமிழ்மொழியை பற்றி கலைஞர் குறிப்பிட்டுச் சொல்லும் போது, தமிழை தமிழே என்று அழைக்கும் சுகம் வேறு எதிலும் கிடையாது என்பார். அப்படிப்பட்ட தாய் மொழியாம் தமிழுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது.

தங்கதமிழ்செல்வனுடன், சில நேரம் யாருக்கும் தெரியாமல் பழகுகிற வாய்ப்புகளை நாங்கள் பெற்றது உண்டு. அவரிடம் பிடித்த விசயம் என்னவென்றால், அவர் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதுபோன்று அவருடைய சிரிப்பு கள்ளம்கபடம் இல்லாதது. சட்டமன்றத்தில் சில நேரம் நான் பேசிவிட்டு வெளியேவரும் போது, என்னிடம் வந்து ‘அண்ணே, சூப்பரா பேசினீர்கள்’ என்று தனிப்பட்ட முறையில் சொல்வார்.

தங்கதமிழ்செல்வனை ரொம்ப நாளாகவே எப்படியாவது தூண்டில் போட்டு இழுத்து விடலாம் என்று முயற்சியில் நாங்கள் ஈடுபட்டது உண்டு. அவர் மாட்டவில்லை. ஆனால், இப்போது மாட்டிவிட்டார். கொஞ்சம் தாமதம் அவ்வளவு தான். லேட்டா வந்தலும் லேட்டஸ்ட்டா வந்து இருக்கிறார்.

ஜெயலலிதா மறைவு என்பது மர்மமான கேள்விக்குறியோடு இருந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் எத்தனையோ முதல் அமைச்சராக இருந்தவர்கள் மறைந்தபோது இப்படி ஒரு பிரச்சினை வந்தது உண்டா? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நாங்களா முதலில் சொன்னோம். இன்றைக்கு துணை முதல்–அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தானே இதை முதலில் சொன்னார்.

இதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை ஆணையத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை விசாரிக்க வேண்டும் என்று 6 முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். அதை ஏற்றுக் கொண்டு இதுவரை ஒருமுறை கூட ஆஜராகாதவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்பதை மறந்து விடாதீர்கள்.

வெறும் பதவிக்காக, பணத்துக்காக தலையாட்டி பொம்மையாக, அடிமைகளாக இருந்து கொண்டு இருக்கும் நிலையில் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. உண்மையாக அ.தி.மு.க.வில் இன்றைக்கும் உழைத்துக் கொண்டு இருக்கும் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள் அங்கே இருப்பது நியாயமல்ல. உங்களின் இயக்கம், தாய்க் கழகமான தி.மு.க. தான். நான் இந்த கூட்டத்தின் மூலமாக அவர்களையும் அழைக்க விரும்புகிறேன்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் நாம் வெற்றி பெற்றோம். சட்டமன்றத்தில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என்ன பேசுகிறார்கள் என்றால், இந்த தேர்தலில் தி.மு.க. மக்களிடம் பொய்யான வாக்குறுதி தந்து, தவறான வாக்குறுதி தந்து, அதையும் தாண்டி மக்களை மிட்டாய் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

38 தொகுதிகளில் நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்றோம் என்றால், நீங்கள் (அ.தி.மு.க.) ஒரு தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறீர்களோ. நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா?. மக்கள் என்ன இழிச்சவாயர்களா?. தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்–அமைச்சர் பேசலாமா?. தி.மு.க. முறையாக தேர்தலை சந்தித்து 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று கம்பீரமாக ஆட்சி அமைக்கும். இன்றைக்கு இருக்கும் ஆட்சி இன்னைக்கா, நாளைக்கா என ஐ.சி.யு.வில் உள்ளது. ஐ.சி.யு. என்பதை விட, கோமா நிலையில் உள்ளது அ.தி.மு.க. ஆட்சி.

நாங்கள் கொடுத்தது மிட்டாய் அல்ல. தமிழக மக்களுக்கு நாங்கள் கொடுத்து இருப்பது வாக்குறுதி. இன்று இல்லை என்றாலும் நாளை தி.மு.க. தானே ஆட்சிக்கு வரப் போகிறது. தேர்தல் நேரத்தில் தந்துள்ள அத்தனை உறுதிமொழிகளையும், மீண்டும் தேர்தல் நேரத்தில் தரப்போகும் அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவோம்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தான் மத்தியில் நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். அதை நான் மறுக்கவில்லை. அப்போது குஜராத் முதல்–அமைச்சராக இருந்த மோடி அதை ஏற்கவில்லை. தமிழகத்தில் கலைஞர் முதல்–அமைச்சராக இருந்தபோது அதை ஏற்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று தடை உத்தரவு பெற்றார்.

கலைஞர் முதல்–அமைச்சராக இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழையாமல் பார்த்துக் கொண்டார். ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தவரை கூட வரவில்லை. அவரை சர்வாதிகாரி என்ற நிலையில் நான் அவரை விமர்சித்து இருந்தாலும், மத்திய அரசை கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தவர் அவர். நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வை தடுப்போம் என்று கூறி இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு தடுக்கவில்லையே?.

பள்ளிக் கல்வியில் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற முயற்சி எடுத்த நேரத்தில் அதை திரும்ப பெற வைத்தது நம்முடைய எம்.பி.க்கள் தான். ரெயில்வே துறையில் தமிழிலும் பேசக்கூடாது, ஆங்கிலத்திலும் பேசக்கூடாது. இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை அனுப்பிய உடனே, அனுப்பிய ஒரு மணி நேரத்தில் அதை திரும்பப் பெற வைத்தோம் என்றால் அது தி.மு.க. எம்.பி.க்களால் தான்.

இதேபோல், தபால் துறையில் தேர்வு எழுதுவதற்கு இந்தி. தமிழ் கிடையாது. அதை எதிர்த்து குரல் கொடுத்தார்கள். அதன் பலனாக, நடத்திய தேர்வை ரத்து செய்து இனி தமிழிலும் தேர்வு எழுதலாம் என்ற உத்திரவாதத்தை பெற்று இருக்கும் கட்சி தான் தி.மு.க.. அதுபோல் ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், நியூட்ரினோ திட்டமாக இருந்தாலும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

நியூட்ரினோ திட்டம் என்பது துணை முதல்–அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தொகுதியில் தான் உள்ளது. தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், துணிச்சல் இருந்தால் அதை எதிர்த்து சட்டமன்றத்தில் வாதிடுவதற்கு இந்த ஆட்சியாளர்கள் தயாராக இருக்கிறார்களா?. ஒருபுறம் காவிரி பிரச்சினை, சேலம் உருக்காலை பிரச்சினை, நெக்ஸ்ட் தேர்வு பிரச்சினை, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை இப்படி பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலையில், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். சட்டமன்றத்தில் தினமும் குரல் கொடுத்துள்ளோம்.

ஆட்சியை கலைக்க கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள் என்று நம்மை பார்த்து விமர்சனம் செய்கிறார்கள். இனிமேல் கனவு எல்லாம் காண வேண்டிய அவசியம் இல்லை. நினைவாகவே விரைவில் நடக்கப் போகிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


Next Story