மெட்டல் டிடெக்டர் கருவி ஒலி எழுப்பியதால் கோவை விமானத்துக்கு வந்த சாக்குமூட்டைகளில் வெடிபொருள் இருந்ததாக பீதி போலீஸ் அதிகாரிகள் தீவிர சோதனை
கோவை விமானத்தில் மெட்டல் டிடெக்டர் கருவி ஒலி எழுப்பியதால் சாக்குமூட்டைகளில் வெடி பொருள் இருந்ததாக பீதி ஏற்பட்டது. இதனால் போலீஸ் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள்.
கோவை,
கோவையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மும்பைக்கு ஒரு விமானம் புறப்பட தயாராக நின்றது. அப்போது விமானத்தில் அனுப்ப கொண்டு வரப்பட்ட 2 சாக்குமூட்டை பார்சலை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது வெடிமருந்து பொருட்கள் இருப்பதற்கான ஒலியை அந்த கருவி எழுப்பியது. மேலும் கருவியின் திரையிலும் வெடிபொருட்கள் இருப்பது போன்று தெரிந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்பநாய் மூலம் சோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி மோப்பநாயும் சாக்குமூட்டையை சுற்றி, சுற்றி வந்து மோப்பம்பிடித்தபடி குரைத்தது. இதனால் அதில் வெடிபொருள் இருப்பதாக பீதி நிலவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், போலீஸ் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். அந்த 2 சாக்குமூடைகளிலும் ரெடிமேடு பார்சல் என்று எழுதப்பட்டு இருந்தது. ஆனாலும் அந்த பார்சலை விமானத்தில் ஏற்றுவதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடைவிதித்தனர்.
மேலும் அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதற்குள் 94 கிலோ ரசாயன பவுடர் இருந்தது. இந்த பவுடர் ரப்பர் மற்றும் கண்ணாடி பொருட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக பயன்படுத்தும் சாக்கோ பவுடர் என்றும், இதை கோவை துடியலூரில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்து, சத்தீஷ்கர் மாநிலம் பிலாய் நகரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு அனுப்ப கொண்டு வரப்பட்டு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
பார்சலில் ரசாயன பவுடர் என்பதற்கு பதிலாக ரெடிமேடு துணி பொருள் என்று எழுதப்பட்டு இருந்தது குறித்து விமானநிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். சாக்கு மூட்டைகளில் வெடிபொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் நேற்று காலை வேறு ஒரு விமானத்தில் அந்த சரக்கு பார்சல்கள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story