கோவில்பட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு தொழிற்சாலை கண்டுபிடிப்பு ஒருவர் கைது
கோவில்பட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மேற்பார்வையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அரிகண்ணன், இசக்கிராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவில்பட்டியில் இருந்து பரமக்குடி செல்லும் சாலையில் உள்ள புளியங்குளம் கிழக்குப்பகுதியில் வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 3 ராக்கெட் பட்டாசு பெட்டிகள், 100 சீனி வெடி தயார் செய்ய பயன்படுத்தப்படும் காலி வளையங்கள், மருந்து செலுத்தப்பட்ட 100 வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லோடு ஆட்டோவை ஓட்டி வந்த கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாணிக்கராஜாவிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் புளியங்குளம் கிராமத்தின் அருகே மறைவான பகுதியில் உள்ள காலி இடத்தில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யும் தொழிற்சாலை நடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு பட்டாசு தயாரிக்க பயன்படும் குளோரேட், சாம்பல், கரி மருந்து, உப்பு ஆகியவை மூட்டைகளிலும், 4 சீனி வெடி பெட்டிகள், 25 கருந்திரி திரிதட்டு உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மாணிக்கராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மாணிக்கராஜா மீது கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, கொப்பம்பட்டி, நாலாட்டின்புதூர், கழுகுமலை, எட்டயபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story