விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை த.மா.கா. எதிர்க்கும் - ஜி.கே.வாசன் பேச்சு


விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை த.மா.கா. எதிர்க்கும் - ஜி.கே.வாசன் பேச்சு
x
தினத்தந்தி 22 July 2019 5:00 AM IST (Updated: 22 July 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை த.மா.கா. எதிர்க்கும் என்று திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் மோகன் கார்த்திக் வரவேற்று பேசினார். காமராஜரின் புகைப்பட கண்காட்சியை மாநில துணைத்தலைவர் ஞானதேசிகன் திறந்து வைத்தார்.

மாநில செயலாளர் சேதுபதி, மாநில துணைத்தலைவர்கள் கோவை தங்கம், சக்தி வடிவேல், ஈரோடு ஆறுமுகம், குனியமுத்தூர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். மாநில பொது செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மாவட்ட பொறுப்பாளர்கள் கவுதமன், ஈரோடு சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:–

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி என்று சொன்னால் த.மா.கா. தான் என்று சொல்லும் நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை நிறைவேற்றும் சக்தி த.மா.கா.வுக்கு மட்டுமே உண்டு. த.மா.கா. என்றைக்கும் சுயலாபம் கருதி எந்த முடிவையும் எடுக்காது. அதுபோல் சுயமரியாதையை யாரிடமும் விலைபேசியதும் கிடையாது. வளமான, வலிமையான, வளர்ச்சியான தமிழகத்தை உருவாக்குவதை லட்சியத்துடன் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் த.மா.கா. மரியாதைக்குரிய, எல்லோராலும் மதிக்கக்கூடிய கட்சியாக விளங்கி வருகிறது. நாம் ஆளும் கட்சியாக மாற வேண்டும். படிப்படியாக அதற்கான பணிகளில் நாம் ஈடுபட வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி விரும்பியது. ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரதம வேட்பாளராக அடையாளம் காட்டப்பட்டவர் இப்போது இருந்த இடம் தெரியாமல் சுற்றி வருகிறார். தமிழகத்தில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்ததற்கு த.மா.கா.வின் பங்களிப்பு பெரும்பான்மையானது.

சிறுபான்மையின மக்கள், ஆதிதிராவிட மக்களின் உரிமையை என்றும் நிலைநாட்டும் இயக்கமாக த.மா.கா. உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அளித்த தவறான வாக்குறுதிகளை நம்பி தமிழக மக்கள் ஏமாற்றமடைந்து விட்டனர். மத்தியில் காங்கிரஸ் கட்சி தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தவிக்கிறது. தமிழக மக்கள் தற்போது அ.தி.மு.க. அரசின் மீது நம்பிக்கையை பெற்று இருக்கிறார்கள். நடைபெற உள்ள வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார்.

தமிழக அரசு குடிநீர் பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை ஒருபோதும் விவசாயிகள் மீது அரசு திணிக்கக்கூடாது. அப்படி திணித்தால் அதை த.மா.கா. எதிர்க்கும். அத்திக்கடவு–அவினாசி திட்ட பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும். உயர்கோபுர மின்பாதையை விவசாய நிலங்களில் அமைக்காமல், பூமிக்கு அடியில் மின்கம்பிகளை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். டாலர் சிட்டியான திருப்பூரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து முயற்சிக்க வேண்டும். த.மா.கா. தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது. மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்துள்ள இயக்கம். இருந்தாலும் கடினமாக உழைத்து உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய நாம் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story