நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறிப்பு: மர்ம நபர்கள் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது போலீசார் விசாரணை


நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறிப்பு: மர்ம நபர்கள் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 July 2019 4:30 AM IST (Updated: 22 July 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியுள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியை சேர்ந்தவர் மேரி அல்போன்ஸ் (வயது 60). இவர் சம்பவத்தன்று புன்னைநகர் பகுதியில் உறவினரை பார்ப்பதற்காக சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மேரி அல்போன்ஸ் கழுத்தில் கிடந்த 9½ பவுன் நகையை பறிக்க முயன்றனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட மேரி அல்போன்ஸ் நகையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

இதனால் நகை இரண்டாக அறுந்தது. அதில் ஒரு பாதியை மர்ம நபர்கள் பறித்து விட்டு தப்பி சென்றனர். மற்றொரு பகுதி மேரி அல்போன்ஸ் கையில் இருந்தது. மர்ம நபர்கள் பறித்து சென்ற நகை 4 பவுன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் மேரி அல்போன்ஸ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஆனால் மர்ம நபர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. இதைத் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே ஏதேனும் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு கடையில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி செல்லும் காட்சி அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இதனையடுத்து கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் முழுவதும் இந்த தேடுதல் வேட்டை நடக்கிறது. விரைவில் மர்ம நபர்கள் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story