சமூக விரோத செயல்கள் நடப்பதாக கூறி பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம் பேரணாம்பட்டில் பரபரப்பு
சமூக விரோத செயல்கள் நடப்பதாக கூறி பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு நகரின் மையப்பகுதியில் அரசினர் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என 2 பள்ளிகளும் ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. இந்த பள்ளியின் காம்பவுண்டு 3 பக்கமும் இடிந்து போனதால் போதிய பராமரிப்பின்றி இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது.
மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு குடிநீர் வசதி கிடையாது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை ஓய்வு பெற்ற ஆசிரியர் சவுந்தரபாண்டியன் தலைமையில் அ.தி.மு.க. நகர துணை செயலாளர் சிவாஜி, நகர காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார், த.மா.கா. தலைவர் துரைசதீஷ்பாபு, தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் நாகராஜன், ஊர் நாட்டாண்மை மனவாளன் ஆகியோர் ஒன்று திரண்டு பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளிக்கு வந்த மாணவர்களை அங்கு போடப்பட்டிருந்த பந்தல் நிழலில் இருக்கும்படி கூறிவிட்டு பள்ளிக்கு பூட்டு போட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் செண்பகவள்ளி விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டத்தை கைவிட பொதுமக்கள் மறுத்துவிட்டனர். உடனே தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் அங்கு சென்று ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு பேசி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். பின்னர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி வேணுசேகரன் பள்ளியை பார்வையிட்டு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் 3 மாதத்தில் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story