மருத்துவ மேற்படிப்பு நுழைவுத்தேர்வை தமிழக அரசு அனுமதிக்காது அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


மருத்துவ மேற்படிப்பு நுழைவுத்தேர்வை தமிழக அரசு அனுமதிக்காது அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 23 July 2019 4:30 AM IST (Updated: 22 July 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ மேற்படிப்பு நுழைவுத்தேர்வை தமிழக அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டியை சேர்ந்த அனுராதா, சமோவ் தீவில் உள்ள அபியர் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பெண்கள் பளு தூக்கும் பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். இதற்காக அவருக்கு பாராட்டு விழா நேற்று புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அனுராதாவை பாராட்டி, பொன்னாடை அணிவித்து, அவருக்கு ரூ.50 ஆயிரம் ஊக்க தொகை வழங்கினார். விழாவில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அனுராதாவிற்கு தமிழக முதல்-அமைச்சர் விரைவில் பரிசு தொகையினை அறிவிப்பார். சென்னையில் ரூ.50 கோடி மதிப்பில் விபத்து கால மறுவாழ்வு மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மருத்துவத்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட 108 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு முடிவடைந்து விட்டது. வருகிற 1-ந் தேதி மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்து உள்ள மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வை முதலில் எதிர்த்த மாநிலம் தமிழகம் தான். அதன் பிறகுதான் ஒவ்வொரு மாநிலமாக இந்த தேர்வை எதிர்த்து வருகிறது.

நமது எதிர்ப்பால் தான் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழு தமிழக அரசை அழைத்து எதிர்ப்பதற்கான காரணங்களை கேட்டது. தமிழக அரசு இந்த தேர்வு நடைமுறை படுத்தப்பட்டால் ஏற்படும் பாதகங்களை எடுத்துக்கூறியது. இந்த தேர்வை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story