திருவாரூரில் ரேஷன்-ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயன்ற விவசாயிகள்


திருவாரூரில் ரேஷன்-ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயன்ற விவசாயிகள்
x
தினத்தந்தி 22 July 2019 10:45 PM GMT (Updated: 22 July 2019 6:37 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்கிடக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தென்னை விவசாயிகள் ரேஷன், ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயலின் தாக்கத்தால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக லட்சக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்தும், வேரோடும் சாய்ந்தன. இதனால் தென்னை விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணத்தை அறிவித்து வழங்கியது. இந்த நிவாரணம் முழுமையாக அனைவருக்கும் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க முயற்சி

இந்த நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி, தம்பிக்கோட்டை, தலையாலங்காடு, முத்துப்பேட்டை போன்ற பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்கிடக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தனர்.

அப்போது நிவாரணம் வழங்கிட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட குடியுரிமை பொருட்களை கலெக்டரிடம் ஒப்படைக்க போவதாக தெரிவித்தனர்.

பரபரப்பு

இதனையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆனந்த், பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தென்னை விவசாயிகளிடம் உறுதியளித்தார். இதனை தொடர்்ந்து ரேஷன்-ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டு் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story