பாளையங்கோட்டை அருகே போலீசாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
பாளையங்கோட்டை அருகே விசாரணைக்கு சென்ற போலீசாரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை,
பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ், விவசாயி. இவர் வயலில் சென்று புல் அறுக்கும் போது, இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கஸ்பார் வில்லியம் (வயது 30), சுந்தர், குணசேகரன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீஸ் ஏட்டு கண்ணன் (45), போலீஸ்காரர் அஞ்சனகுமார் (34) ஆகிய 2 பேரும் மடத்துப்பட்டி கிராமத்துக்கு சென்றனர். அங்குள்ள கஸ்பார் வில்லியம் வீட்டுக்கு சென்று அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்தனர். அப்போது கஸ்பார் வில்லியம் போலீசாருடன் தகராறு செய்து தாக்குதலிலும் ஈடுபட்டார். இதில் போலீஸ்காரர் அஞ்சனகுமார் செங்கலால் தாக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி ஏட்டு கண்ணன் சீவலப்பேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் மடத்துப்பட்டிக்கு விரைந்து சென்று அஞ்சனகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதே நேரத்தில் கஸ்பார் வில்லியம் போலீசார் தாக்கியதில் காயம் அடைந்ததாக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஏட்டு கண்ணன் சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கஸ்பார் வில்லியம், அவருடைய தாயார் அன்னசெல்வம், அக்காள் செல்வி (35), உறவினர் துரை (43) ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story