தி.மு.க.வின் வேடம் வேலூர் தேர்தலில் கலைந்து விடும் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி


தி.மு.க.வின் வேடம் வேலூர் தேர்தலில் கலைந்து விடும் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 22 July 2019 11:30 PM GMT (Updated: 22 July 2019 7:29 PM GMT)

தி.மு.க.வின் வேடம் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் கலைந்து விடும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி,

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இனி எந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறாது. தி.மு.க.வின் வேடம் வேலூரில் கலைந்து விடும். அண்ணாவை விரும்பும் தி.மு.க.வினர், அனைவரும் அ.தி.மு.க.வுக்கு வரும்படி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் நாங்கள் அழைக்கிறோம். அ.தி.மு.க.வில் தான் உண்மை தொண்டனுக்கு பதவி கிடைக்கும்.

ஆனால் தி.மு.க. கட்சி ஒரு கம்பெனி. ஸ்டாலின் குடும்பத்தினர் தான் பதவிக்கு வர முடியும். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அடுத்து அவரது மகன் தி.மு.க.வில் உயர் பதவிக்கு வருவார். மன்னர் பரம்பரையில் வருவது போல் வாரிசுகள் கட்சி பதவிக்கு வருவது கருணாநிதி குடும்பத்தில் தான் சாத்தியம். தி.மு.க.வினரே இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் குடும்ப அரசியலை எதிர்த்து வாக்களிப்பார்கள். அ.தி.மு.க. நினைத்தால் தி.மு.க. கட்சியே இருக்காது.

சட்டரீதியாக சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் தற்போது கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது. நான் சட்டம் படிக்கவில்லை. யார் வெளியே வந்தாலும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது.

திருத்தங்கல் ரெயில்வே மேம்பாலம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலர் கோர்ட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பாலம் கண்டிப்பாக அமையும். தேசிய கல்வி கொள்கையை பற்றி நடிகர் சூர்யா போல் யார் நல்ல கருத்து சொன்னாலும் அதை முதல்–அமைச்சர் ஏற்றுக்கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story