ரூ.4 லட்சம் கோடி கடன்: தமிழகத்தில் திவாலான ஆட்சி நடக்கிறது வேலூரில், கே.எஸ்.அழகிரி பேட்டி


ரூ.4 லட்சம் கோடி கடன்: தமிழகத்தில் திவாலான ஆட்சி நடக்கிறது வேலூரில், கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 23 July 2019 3:45 AM IST (Updated: 23 July 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் திவாலான அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

வேலூர், 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வேலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் திவாலான அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது. ரூ.4 லட்சம் கோடி கடன் உள்ளது. இவ்வளவு கடன் உள்ள அரசாங்கத்தால் எந்த சமூகநல திட்டத்தையும், பொதுத்திட்டத்தையும், குடிநீர் பிரச்சினை திட்டத்தையும், சாலை வசதி திட்டத்தையும் நிறைவேற்றவே முடியாது. ஏனென்றால் வருமானத்தை மீறிய கடன்.

எனவே அந்த அரசாங்கத்தை நம்பி வேறு யாரும் உதவி செய்ய வர மாட்டார்கள். கடனில் இந்த அரசு இயங்குகிறது. ஆனால் இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலங்க மாட்டார். ஏனென்றால் கடன் அரசாங்கத்துக்கு தான் உள்ளதே தவிர, ஆளுகிறவர்களுக்கு அல்ல. எனவே இந்த ஆட்சியை அகற்ற வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டம், ‘நீட்’ தேர்வு போன்றவை சமூகநீதி பிரச்சினையாகும். நீட்தேர்வில் வசதியானவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தனியார் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் மட்டுமே வெற்றி பெறும் சூழ்நிலை காணப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

நவோதயா பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் குறைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதித்து தமிழகத்தில் அப்பள்ளிகள் செயல்படுமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும். வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியினர் இன்று (நேற்று) முதல் பிரசாரம் மேற்கொள்வார்கள்.

பிரதமர் வேட்பாளராக கருதிய ராகுல்காந்தி தற்போது காணாமல் போய்விட்டார் என்று ஜி.கே.வாசன் விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது பல்வேறு பதவிகளை அனுபவித்தவர் ஜி.கே.வாசன். அவர் மாநில தலைவராக இருந்தபோது காங்கிரஸ் வளர்ச்சிக்காக உழைக்கவில்லை. அனைத்து கட்சியினருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தார். காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க ஜி.கே.வாசனுக்கு எந்த அருகதையும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட தலைவர் டீக்காராமன், பொருளாளர் பாஸ்கர், சிறுபான்மைப்பிரிவு மாநில தலைவர் அஸ்லாம் பாஷா, மாநில ஒருங்கிணைப்பாளர் தீனா என்கிற தினகரன், மாவட்ட தலைவர் வாகிப்பாஷா மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story