பாகலூர் அருகே முதியவர் கொலையில் வாலிபர் கைது மது குடிக்கும் தகராறில் கொன்றதாக வாக்குமூலம்


பாகலூர் அருகே முதியவர் கொலையில் வாலிபர் கைது மது குடிக்கும் தகராறில் கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 23 July 2019 3:30 AM IST (Updated: 23 July 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

பாகலூர் அருகே முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மதுகுடிக்கும் தகராறில் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று முன்தினம் இரவு முதியவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து சென்ற பாகலூர் போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது கொலை செய்யப்பட்ட முதியவர் ஓசூர் அருகே உள்ள பன்னப்பள்ளியைச் சேர்ந்த வெங்கடேசப்பா (வயது 70) என்பதும், பாகலூரில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரத்குமார் (25) என்பவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மதுகுடிக்கும் தகராறில் முதியவரை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

சம்பவத்தன்று இரவு வெங்கடேசப்பாவும், சரத்குமாரும் பாகலூர் பகுதியில் உள்ள மதுக்கடை அருகில் அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சரத்குமார் மதுபோதையில் வெங்கடேசப்பாவை அருகில் உள்ள பீர்பாட்டிலால் தாக்கினார். இதில் வெங்கடேசப்பா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டதாகவும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி தன்னை பிடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் சரத்குமாரை கைது செய்தனர்.

Next Story