ஆண்டிப்பட்டி அருகே வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ஆண்டிப்பட்டி அருகே வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 July 2019 10:46 PM GMT (Updated: 22 July 2019 10:46 PM GMT)

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 27 அடியாக சரிந்தது. கடந்த மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையும் போதிய அளவு பெய்யாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வினாடிக்கு 300 கனஅடி வீதம் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பல நாட்களாக நீர்வரத்து இல்லாமல் காணப்பட்ட வைகை அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இனி வரும் நாட்களில் தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இதேபோல் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் படிப்படியாக உயரும் நிலையில் அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 40 கனஅடியில் இருந்து வினாடிக்கு 60 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பல நாட்களுக்கு பிறகு, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், தேனியில் குன்னூர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட உறை கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஆண்டிப்பட்டி, தேனி, வள்ளல்நதி உள்ளிட்ட பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கான குடிநீர் வினியோகம் சீரடையும் நிலை உருவாகியுள்ளது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 28.12 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 144 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 300 மில்லியன் கனஅடியாக இருந்தது.


Next Story