நத்தம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ‘திடீர்’ போராட்டம்


நத்தம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ‘திடீர்’ போராட்டம்
x
தினத்தந்தி 23 July 2019 4:41 AM IST (Updated: 23 July 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நத்தம்,

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் இருந்து நத்தம் நோக்கி வந்த டவுன்பஸ் ஒன்று வழக்கமான நேரத்தை விட 10 நிமிடம் முன்கூட்டியே வந்ததாக கூறப்படுகிறது. இதை காரணம் காட்டி டிக்கெட் பரிசோதகர், டிரைவர்-கண்டக்டரை டிக்கெட் பதிவேட்டில் குறைபாடு உள்ளதாக பதிவு செய்து கண்டித்துள்ளார்.

இதுகுறித்த தகவல் பரவியதை தொடர்ந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பஸ்களை இயக்காமல் நத்தம் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல், மதுரை, துவரங்குறிச்சி, செந்துறை, அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நத்தம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் திண்டுக்கல் போக்குவரத்து கழக மேலாளர் (வணிகம்) ஆனந்தன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

இதையடுத்து டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இந்த போராட்டம் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story