நெற்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்துக்கொலை தோழியுடன் மனைவி கைது


நெற்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்துக்கொலை தோழியுடன் மனைவி கைது
x
தினத்தந்தி 23 July 2019 5:07 AM IST (Updated: 23 July 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

நெற்குன்றத்தில், ஆட்டோ டிரைவரை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த அவருடைய மனைவி மற்றும் தோழியை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை நெற்குன்றம், சக்தி நகர், 24-வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் என்ற சுனில்(வயது 28). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி காயத்ரி(24). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. நாகராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

காயத்ரி, தனது தம்பி வினோத்துக்கு போன் செய்து, “எனது கணவர் இரவு முழுவதும் குடித்துவிட்டு தகராறு செய்து வருகிறார். எனக்கு அவமானமாக இருக்கிறது. எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். எனது கணவர், பிள்ளைகளை பார்த்துக்கொள்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத், உடனடியாக காயத்ரி வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் இல்லை. வீட்டின் படுக்கை அறையில் நாகராஜ் கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்து இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார், நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார், விசாரணை நடத்தினர்.

அதில் நாகராஜை, அவருடைய மனைவி காயத்ரி, தனது தோழியுடன் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

கொலையான நாகராஜூம், அதே பகுதியை சேர்ந்த மகேந்திரனும் நண்பர்கள். இருவரும் ஆட்டோ ஓட்டி வந்தனர். இருவருக்கும் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வந்தனர். இதனால் நாகராஜின் மனைவி காயத்ரி, மகேந்திரனின் மனைவி பானு இருவரும் தோழிகளாக பழகி வந்தனர். காயத்ரி, வானகரத்தில் உள்ள மீன்மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.

நாகராஜ் வீட்டுக்கு மகேந்திரன் அடிக்கடி வந்து சென்றார். இதனால் காயத்ரியுடன் மகேந்திரனுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அறிந்த நாகராஜ், மனைவி காயத்ரியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். சில தினங்களுக்கு முன்புதான் நாகராஜிடம் சமாதானம் பேசி, இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

ஆனாலும் தனது நண்பன் மகேந்திரன் தனக்கு துரோகம் செய்துவிட்டான். அவனை கொலை செய்யாமல் விடமாட்டேன் என நாகராஜ், தனது மற்ற நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். இதனை அறிந்த மகேந்திரனின் மனைவி பானு, இதுபற்றி காயத்ரியிடம் பேசினார்.

அப்போது காயத்ரி, நாகராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார். எனவே நாம் இருவரும் சேர்ந்து நாகராஜை கொலை செய்து விடலாம் என பானுவிடம் கூறினார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த நாகராஜன், அயர்ந்து தூங்கிவிட்டார். பின்னர் தங்கள் திட்டத்தின்படி காயத்ரி, பானு இருவரும் சேர்ந்து நாகராஜன் முகத்தில் தலையணையால் அமுக்கியும், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் பானு அங்கிருந்து தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

அதன்பிறகு காயத்ரி, தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது தம்பி வினோத்திடம் செல்போனில் தகவல் தெரிவித்துவிட்டு கோபித்துக்கொண்டு செல்வதுபோல் நாடகமாடிவிட்டு, ஒன்றும் தெரியாததுபோல் மீன்மார்க்கெட் வேலைக்கு சென்று விட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து காயத்ரி, அவருடைய தோழியான பானுவை இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மகேந்திரன் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story