மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 July 2019 4:45 AM IST (Updated: 24 July 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக அவர் மீது துறை வாரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

பணி ஓய்வு பெறும் நாளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து அரசு ஊழியர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இந்த பணி இடைநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று பணி புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்தில் தேனி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை, பெரியகுளம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு மற்றும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், இந்த அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. பல்வேறு பணிகளுக்காக வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Next Story