ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி கொலை: கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள்


ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி கொலை: கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள்
x
தினத்தந்தி 24 July 2019 4:15 AM IST (Updated: 24 July 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி கொலை வழக் கில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டியில் ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் சதீஷ்குமார் (வயது 24) என்பவர், அவருடைய தோட்டத்தில் எரித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து தேனி மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணதெய்வேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் முதற்கட்டமாக சதீஷ்குமார் இறந்து கிடந்த இடத்தில் இருந்து 30 அடி தூரத்தில் கிணறு ஒன்று உள்ளது. அங்கு தடயங்கள் எதுவும் உள்ளதா? என்று கண்டறிய ஆண்டிப்பட்டி தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் கிணற்றில் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சதீஷ்குமாரின் தோட்டம் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால், அந்த பகுதியில் புதிதாக நபர்கள் யாரும் வந்து சென்றார்களா? என்பது குறித்து, அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சதீஷ்குமாரின் 2 செல்போன்களுக்கு வந்த அழைப்புகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இரவில் மதுரையில் இருந்து காரில் சதீஷ்குமார் வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் வந்த வழியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story