ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சையில், விவசாயிகள் பிரமாண்ட பேரணி


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சையில், விவசாயிகள் பிரமாண்ட பேரணி
x
தினத்தந்தி 24 July 2019 4:45 AM IST (Updated: 24 July 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனுவும் அளித்தனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சை உள்பட 6 மாவட்டங்களில் விவசாயிகள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி தஞ்சையில் நேற்று பேரணி நடந்தது.

காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரியில் உடனடியாக தமிழகத்துக்குரிய தண்ணீரை பெற்று தர தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை உடனடியாக மூடவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். பேரணியில் 800 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இந்த பேரணி நடந்தது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பேரணி அடைந்ததும் அங்கு சாலையில் அமர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் கலெக்டர் அண்ணாதுரையை முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவினை வழங்கினர்.

இந்த பேரணியில் தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாபுரம் முருகேசன், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின், தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் விவசாய சங்கங்கள் என 24 அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பேரணி கலெக்டர் அலுவலகத்தை அடைந்தபோது அங்கு இருந்த 2 நுழைவுவாயில்களும் மூடப்பட்டன. ஆங்காங்கே தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த பேரணியையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேரணியின் போது திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

Next Story