செப்டம்பர் மாதம் 7-ந் தேதி சந்திரயான்-2 நிலவில் இறங்கும் மகேந்திரகிரி இஸ்ரோ மைய திட்ட இயக்குனர் மூக்கையா பேட்டி


செப்டம்பர் மாதம் 7-ந் தேதி சந்திரயான்-2 நிலவில் இறங்கும் மகேந்திரகிரி இஸ்ரோ மைய திட்ட இயக்குனர் மூக்கையா பேட்டி
x
தினத்தந்தி 23 July 2019 11:15 PM GMT (Updated: 23 July 2019 6:46 PM GMT)

சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி நிலவில் இறங்கும் என்று மகேந்திரகிரி இஸ்ரோ மைய திட்ட இயக்குனர் மூக்கையா கூறினார்.

தூத்துக்குடி,

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் புவியின் மையத்தில் இருந்து நீள்வட்டப்பாதையின் அருகில் 170 கிலோ மீட்டர் தூரத்திலும், புவியின் மையத்தில் இருந்து நீள்வட்டப்பாதையின் தொலைவில் 39 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் நமது விஞ்ஞானிகளின் திறமையான செயல்பாடுகளால் 6 ஆயிரம் கிலோ மீட்டர் கூடுதலாக சென்று அதாவது 45 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த ராக்கெட்டில் உள்ள முதல் நிலை திட எரிபொருள், 2-ம் நிலை திரவ எரிபொருள் மற்றும் திரவ ஹைட்ரஜன் ஆகியவை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் உருவாக்கப்பட்டது. இதுதவிர சந்திரயான் 2-க்கு பல்வேறு சோதனைகளை மகேந்திரகிரியில் செய்து உள்ளோம். நிலவு போன்று நிலத்தை தயார் செய்து, அதில் ரோவர் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொள்வதற்கான தொழில்நுட்பங்களை ஆய்வு செய்து உள்ளோம்.

செப்டம்பர் 7-ந் தேதி

சந்திரயான்-2 முதலில் ஏவுவதற்கு தயாராக இருந்தபோது, சிறு தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் அப்போது ராக்கெட் ஏவுவது நிறுத்தப்பட்டு அதனை சரி செய்து தற்போது மீண்டும் அனுப்பி உள்ளோம். சந்திரயான்-1 பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. அது எடை குறைவானது.

தற்போது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 அனுப்பப்பட்டு உள்ளது. இது 3 ஆயிரத்து 800 கிலோ எடை கொண்டது. சந்திரயான்-1 நிலவை சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டு இருக்கும். ஆனால் சந்திரயான்-2 மூன்று கட்டங்களை கொண்டது. நிலவை முதலில் 100 கிலோ மீட்டர் தூரம் ஆர்பிட்டர் சுற்றி வரும். 2-வது கட்டமாக நிலவின் தென்துருவத்தில் லேண்டர் தரையிறங்கும். 3-வது கட்டமாக ரோவர் நிலவில் சுமார் 500 மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும்.

சந்திரயான்-2 வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி அதிகாலை 2.43 மணிக்கு நிலவில் இறங்கும். அதன்பிறகு ரோவர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்து பெங்களூருவில் உள்ள ஆய்வு மையத்துக்கு சிக்னல்களை அனுப்பும். அடுத்த கட்டமாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யா திட்டத்தை மேற்கொள்ளும் பணியில் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story