மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் எதிரொலி: எச்.ஐ.வி. பாதித்த மாணவன் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு கலெக்டர் நடவடிக்கை


மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் எதிரொலி: எச்.ஐ.வி. பாதித்த மாணவன் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் எதிரொலியாக எச்.ஐ.வி. பாதித்த மாணவன் மீண்டும் அரசு பள்ளியில் சேர்க்க மாவட்ட கலெக்டர் சாந்தா நடவடிக்கை எடுத்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த 15 வயதுடைய பள்ளி மாணவர் ஒருவர் கடந்த 10-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் தனது உறவினர்களுடன் வந்து ஒரு மனு கொடுத்தார். அதில், என்னுடைய தாய் எச்.ஐ.வி. நோய் ஏற்பட்டு இறந்து விட்டார். தற்போது நானும் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதுக்கு மாத்திரை உட்கொண்டு வருகின்றேன். நான் 8-ம் வகுப்பு வரை அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தேன். தாய் இறந்ததால் விடுதியில் தங்கியிருந்து 9-ம் வகுப்பு பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்தேன். தற்போது 10-ம் வகுப்பு படிப்பதற்காக மீண்டும் ஏற்கனவே 8-ம் வகுப்பு வரை படித்த அரசு மேல் நிலைப்பள்ளிக்கு சென்றேன். 2 நாள் தான் பள்ளிக்கு சென்றேன். 3-ம் நாள் பள்ளிக்கு சென்ற போது, பள்ளியின் நிர்வாகம் எனது உடல்நிலையை காரணம் காட்டி நீ படிப்பதற்கு இங்கு இடம் இல்லை என்று கூறிவிட்டது. இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே கலெக்டர் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தில் விசாரணை நடத்தி, நான் விடுதியில் தங்கியிருந்து ஏற்கனவே 10-ம் வகுப்பு படித்த அரசு மேல்நிலைப்பள்ளியிலேயே படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை அறிந்த தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து அரசு பள்ளியில் எச்.ஐ.வி. பாதித்த மாணவனை சேர்க்காதது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்கக்கோரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் தங்களது விளக்கத்தை அளிக்க கடந்த 15-ந் தேதி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த எச்.ஐ.வி. பாதித்த மாணவர் மீண்டும் 2-வது முறையாக தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அதில், பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், மேலும் என்னை பாதுகாப்பு மிகுந்த விடுதியுடன் கூடிய ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய கலெக்டர் சாந்தா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கனிடம் மாணவனை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால் மாணவனின் தந்தை அதே பள்ளியில் தனது மகனை சேர்க்க விரும்பவில்லை. மாணவனுக்கு எச்.ஐ.வி. இருப்பது அனைவருக்கும் தெரிந்ததாலும், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் இடையே பிரச்சினை ஏற்பட்டதாலும் தங்களுக்கு மன உளைச்சல் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவன் மற்றொரு அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டார். மேலும் அரசு பள்ளி மாணவர் விடுதியிலும் அவர் தங்கி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Next Story