சென்னையில் பயங்கரம்; பஸ்சை வழிமறித்து மாணவர்கள் மோதல், பட்டா கத்தியால் சரமாரி வெட்டு 7 பேர் படுகாயம்
சென்னை அரும்பாக்கத்தில் கோஷ்டி மோதல் காரணமாக பஸ்சை வழிமறித்து மாணவர்களை கத்தியால் கும்பல் வெட்டியது. இதில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
பூந்தமல்லி,
சென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு பட்டா கத்தியால் வெட்டிக்கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக நடந்து வருகிறது. இப்படி வெவ்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்குள்ளேயே யார் பெரியவர்? என்ற பிரச்சினை ஏற்பட்டு 2 கோஷ்டிகளாக பிரிந்து மோதி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் பெரம்பூரில் இருந்து திருவேற்காடு நோக்கி தடம் எண் 29–ஈ அரசு மாநகர பஸ் சென்றது. இதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். அவர்கள் வழக்கம்போல் பாட்டு பாடியபடி உற்சாகமாக வந்து கொண்டிருந்தனர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை அரும்பாக்கம் அருகே பஸ் சென்றபோது, 4 மொபட்டில் வந்த வாலிபர்கள் சிலர் திடீரென பஸ்சை வழிமறித்து நின்றனர். விபரீதம் நடக்கப்போவதை அறிந்த டிரைவர் உடனே பஸ்சை நடுரோட்டில் நிறுத்தினார். சிறிது நேரத்தில் மொபட்டுகளில் வந்த வாலிபர்கள் பட்டா கத்தியுடன் பஸ்சில் ஏறினர்.
பின்னர் பஸ்சில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை சரமாரியாக வெட்ட தொடங்கினர். அப்போது மாணவர்களும், சக பயணிகளும் அலறினார்கள். பின்னர் சில மாணவர்கள் உயிருக்கு பயந்து பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்கள். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மாணவர்களை அந்த கும்பல் ஓடஓட விரட்டி பட்டா கத்தியால் வெட்டியது.
உயிர் பிழைப்பதற்காக மாணவர்கள் சாலையில் தப்பி ஓடிய காட்சிகள் காண்போரை பதை, பதைக்க வைத்தது. இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர். பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அண்ணாநகர் உதவி கமிஷனர் குணசேகரன், அமைந்தகரை இன்ஸ்பெக்டர் பெருந்துறைமுருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் பட்டா கத்தியுடன் வலம் வந்த கும்பல் தப்பி சென்று விட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் பிராட்வேயில் இருந்து பஸ்சில் வரும் மாணவர்களுக்கும், பூந்தமல்லியில் இருந்து பஸ்சில் வருபவர்களுக்கும் இடையே யார் பெரியவர்? என்பதில் கோஷ்டி மோதல் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நேற்று கல்லூரி வளாகத்திற்குள்ளேயும் இருதரப்பினரும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக, அதே கல்லூரியில் படிக்கும் எதிர்கோஷ்டி மாணவர்கள் பஸ்சை வழிமறித்து சரமாரியாக வெட்டி இருப்பது தெரியவந்தது.
இதில் பச்சையப்பன் கல்லூரியில் 2–ம் ஆண்டு படிக்கும் குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூரை சேர்ந்த வசந்தகுமார் (வயது 19), திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியை சேர்ந்த ஆகாஷ் (19) உள்பட 7 மாணவர்கள் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது. இதில் வசந்தகுமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், ஆகாஷ் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில், மேலும் சில மாணவர்களுக்கு லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் யார்? மோதலுக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் பஸ்சை மறித்து பட்டா கத்தியால் சக மாணவர்களை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பஸ்சை வழிமறித்து மாணவர்களை மற்றொரு கோஷ்டியினர் நடுரோட்டில் விரட்டிவிரட்டி வெட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.