அறுவடைக்கு தயாரான விளைநிலங்களில் மீண்டும் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி விவசாயிகள் அதிர்ச்சி


அறுவடைக்கு தயாரான விளைநிலங்களில் மீண்டும் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி விவசாயிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 24 July 2019 4:45 AM IST (Updated: 24 July 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே அறுவடைக்கு தயாராக உள்ள விளை நிலங்களில் மீண்டும் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து நாங்கூர், காத்திருப்பு, தலச்சங்காடு, காளகஸ்திநாதபுரம், உமையாள்புரம், முடிகண்டநல்லூர் வழியாக மேமாத்தூர் வரை 29 கி.மீட்டர் தூரத்துக்கு கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் எரிவாயு கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்பனார்கோவில் அருகே காளகஸ்தினாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட உமையாள்புரம் கிராமத்தில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது.

இதற்கு அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையும் மீறி கெயில் நிறுவனத்தினர் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் ராட்சத குழாய்களை பதித்தனர். விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மாதம் குழாய்கள் பதிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் தொடங்கியது

உமையாள்புரம் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ள விளைநிலங்களில் கெயில் நிறுவனத்தினர் மீண்டும் ராட்சத குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணியால் அறுவடை பாதிக்கும். விளைநிலங்களை பாதிக்கும் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை கைவிட கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது. விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story