வேப்பனப்பள்ளி அருகே நீர் மேலாண்மை திட்டத்தில் ஏரி தூர்வாரும் பணி கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்


வேப்பனப்பள்ளி அருகே நீர் மேலாண்மை திட்டத்தில் ஏரி தூர்வாரும் பணி கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே ஏரி தூர்வாரும் பணிகளை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

வேப்பனப்பள்ளி,

வேப்பனப்பள்ளி ஒன்றியம் போலுப்பள்ளி ஊராட்சி எண்ணேகொல்ஜெட் ஏரியில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தனியார் நிறுவன பங்களிப்புடன் தூர்வாரும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேடியப்பன், ராமசந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜ், முகிலன், பணி மேற்பார்வையாளர்கள் திருவேங்கடம், நாகராஜ் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் லூயிஸ் அம்ரோஸ், ரமேஷ், பாதுகாப்பு அலுவலர் சக்திவேல், நிர்வாக பொறுப்பாளர்கள் யயாதி, ஜோசன், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழை எதிர் நோக்கி உள்ள நிலையில் நீர்நிலைகளில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தனியார் நிறுவனம்

இதன் மூலம் ஏரி கரைகளை உயர்த்தியும், தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அதிக அளவில் மழை நீரை சேமிக்கவும், குளம், குட்டைகள் மற்றும் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணிகளும் நடைபெறுகிறது. தற்போது போலுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எண்ணேகொல் ஜெட் ஏரி தூர்வாரப்படுகிறது 17.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி தனியார் நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் தூர்வாரப்படுகிறது.

இந்த பணிகளை தரமாகவும், மழைநீர் சேமிக்கும் பொருட்டு கரைகளை உயர்த்தியும், நீர்வரத்து கால்வாய்கள், நீர் வெளியேறும் பகுதிகளை நல்ல முறையில் தூர்வாரி பணிகளை முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கடந்த வாரம் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிச்சு கொண்ட பெத்தனப்பள்ளி ஏரி தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு மழை நீர் சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குளம், நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story