சிவகாசி அருகே வி‌ஷம் வைத்து 30 ஆடுகள் சாகடிப்பு விவசாயி கைது


சிவகாசி அருகே வி‌ஷம் வைத்து 30 ஆடுகள் சாகடிப்பு விவசாயி கைது
x
தினத்தந்தி 24 July 2019 3:30 AM IST (Updated: 24 July 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே வி‌ஷம் வைத்து 30 ஆடுகள் சாகடிக்கப்பட்டது தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கீழத்தாயில்பட்டியை சேர்ந்தவர் சூரியராஜ்(வயது42). இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். இவற்றில் சில அந்த பகுதியில் மேய்ந்து விட்டு இரவில் வீட்டுக்கு வருவது வழக்கமாகும். இதன்படி நேற்று முன்தினம் ஆடுகள் மேயச்சென்றுள்ளன.

அவற்றை இரவில் பட்டியில் அடைக்க ஏற்பாடு நடந்தபோது 10 ஆடுகள் வாயில் நுரை தள்ளியபடி கீழே விழுந்து துடிதுடித்துள்ளன. அதனைதொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக இறந்து போயின. இதைக்கண்டு சூரியராஜூவும், அவரது குடும்பத்தினரும் பதறிப்போனார்கள். மேலும் ஆடுகளை எண்ணியபோது 20 ஆடுகள் வீடுதிரும்பாதது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து மாயமான ஆடுகளை தேடும்பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகில் உள்ள கிராமமான கோட்டையூரில் பழனிசெல்வம்(50) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மாட்டுத்தீவன புல் பயிரிடப்பட்டு இருந்த இடத்தில் 20 ஆடுகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, சூரியராஜின் 30 ஆடுகள் பலியான சம்பவம் கிராம பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கால்நடை மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டனர். விசாரணையில் 30 ஆடுகளும் குருணை மருந்து தின்று இறந்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தோட்ட உரிமையாளர் பழனிசெல்வத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் தனது தோட்டத்திற்குள் ஆடுகள் அடிக்கடி புகுந்து பயிர்களை தின்றதால் ஆடு வளர்ப்போரிடம் எச்சரித்து வந்ததாகவும், ஆனால் தொடர்ந்து ஆடுகள் வந்ததால் மாட்டுத்தீவன புல்லின் மேல் குருணை மருந்தை தெளித்து வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். சூரியராஜின் 30 ஆடுகள் இவ்வாறு பலியானதை தொடர்ந்து வி‌ஷம் வைத்து சாகடித்ததாக பழனிசெல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

இறந்து போன ஆடுகள் பரிசோதனைக்கு பிறகு புதைக்கப்பட்டன. ஏற்கனவே கீழதாயில்பட்டி, கோட்டையூர் கிராமத்தினரிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அங்கு முன் எச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story