உரிய ஆவணங்கள் ஒப்படைத்தும் நளினியை பரோலில் விடுவது தாமதம்


உரிய ஆவணங்கள் ஒப்படைத்தும் நளினியை பரோலில் விடுவது தாமதம்
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

நளினி தங்கும் வீடு குறித்த ஆவணங்கள் ஒப்படைத்து 10 நாட்கள் கடந்தும் அவரை பரோலில் விடுவது தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் அவரை அவரது வக்கீல் இன்று சந்தித்துப்பேசுகிறார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 28 ஆண்டுகால சிறை தண்டனையில் இருந்து தங்களை விடுதலை செய்ய இவர்கள் உள்பட இக்கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரும் போராடி வருகின்றனர். இதற்கிடையில் நளினி தனது மகள் திருமண ஏற்பாடு செய்வதற்காக பரோலில் செல்ல சட்டப்போராட்டம் நடத்தினார். அதன்படி கடந்த 5-ந் தேதி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. எனினும் அவர் தற்போது வரை ஜெயிலில் இருந்து வெளியே வரவில்லை.

நளினி சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்க உள்ளார். இதையடுத்து சிறைத்துறை நன்னடத்தை அதிகாரிகளும், மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தனர். நளினி தங்கும் வீடு குறித்த ஆவணங்களும் சிறைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தகவல் தெரிவிக்க மறுப்பு

இந்தநிலையில் நளினி பரோலுக்கு வேலூர் சிறைத்துறை அதிகாரிகள் வேண்டும் என்றே காலதாமதப்படுத்துவதாக தகவல் பரவியது. இதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியை செல்போனில் தொடர்பு கொண்டபோது எடுக்கவில்லை. அவரது அலுவலகத்துக்கு நளினி பரோல் தொடர்பாக தகவலை சேகரிக்க நிருபர்கள் சென்றனர். முதலில் சந்திப்பதாக கூறினார். பின்னர், தனது உதவியாளர் மூலம் தான் கூட்டத்தில் இருப்பதாக கூறி தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைத்த பின்னரே நளினி பரோலில் விடுவிக்கப்படுவார் என்றும், பாதுகாப்பு காரணங்களால் பரோலில் நளினி வெளியே வருவது தாமதமாவதாகவும் கூறப்படுகிறது. ஐகோர்ட்டின் உத்தரவில், நளினி தங்கும் வீட்டின் ஆவணம், ஜாமீன் உத்தரவாதம் ஆகியவை குறித்து 10 நாட்களுக்குள் பரிசீலனை செய்து விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆவணங்கள் கடந்த 13-ந் தேதி சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் எப்போது நளினி பரோலில் விடுவிக்கப்படுவார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

வக்கீல் சந்திக்கிறார்

இதுகுறித்து நளினியின் வக்கீல் புகழேந்தி கூறியதாவது:-

நளினிக்கு ஒருமாதம் பரோல் வழங்கி கோர்ட்டு அனுமதித்ததையடுத்து, அவர் தங்க உள்ள வீட்டின் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிறைத்துறை அதிகாரிகளிடம் கடந்த 13-ந் தேதி வழங்கிவிட்டோம். 11 நாட்கள் ஆகியும் அவர்கள் ஏன் நளினியை பரோலில் விடவில்லை என்பது குறித்து தெரியவில்லை. சிறைத்துறை அதிகாரிகளிடையே தொடர்பு கொண்டு கேட்டபோது முறையான தகவலை தெரிவிக்கவில்லை. நாளை (இன்று) நளினி மற்றும் முருகனை ஜெயிலில் சந்தித்து பேசி விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.

Next Story