மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் பலியான நினைவு தினம்: நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் அஞ்சலி


மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் பலியான நினைவு தினம்: நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் அஞ்சலி
x
தினத்தந்தி 23 July 2019 11:00 PM GMT (Updated: 23 July 2019 9:27 PM GMT)

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் பலியான நினைவு தினத்தையொட்டி நேற்று தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நெல்லை,

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் பகுதியில் பேரணி வந்தபோது ஏற்பட்ட மோதலில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர்.

ஆற்றில் உயிர் நீத்த தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 20-ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் கீழ் உள்ள தாமிரபரணி ஆற்றில் நேற்று நடந்தது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

காங்கிரஸ்

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தென் மண்டல அமைப்பாளர் தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் வர்த்தக அணி தலைவர் சக்சஸ்புன்னகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாரதீய ஜனதா கட்சியினர் தாழ்த்தப்பட்டோர் அணி மாநில துணைத்தலைவர் முருகதாஸ் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன் தலைமையிலும், இந்து மக்கள் கட்சியினர் தலைவர் உடையார் தலைமையிலும், தமிழ்நாடு தேசிய கட்சியினர் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமையிலும், தமிழர் தேசிய கொற்றம் கட்சியினர் நிறுவன தலைவர் அ.வியனரசு தலைமையிலும், பகுஜன் சமாஜ் கட்சியினர் மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

புதிய தமிழகம்

புதிய தமிழகம் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மதியம் 12-30 மணியளவில் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் ஊர்வலம் நிறைவடைந் தது. பின்னர் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன் தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலை முன்பு இருந்து ஊர்வலமாக தாமிரபரணி ஆற்றிற்கு வந்தனர். அவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து இருந்தனர். பின்னர் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன், மண்டல செயலாளர் அழகர்சாமி, செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியினர் மகளிர் அணி நிர்வாகி குயிலி நாச்சியார் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழ் புலிகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வளவன், மாடத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மத்திய குழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். மாநில துணை பொது செயலாளர்கள் உஞ்சை அரசன், கனியமுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழர் விடுதலை களம் சார்பில் மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் நிறுவன தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில் நெல்லை எம்.ஜி.ஆர். சிலை முன்பு இருந்து தாமிரபரணி ஆற்றிற்கு ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆதித்தமிழர் பேரவையினர் மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் வக்கீல் ரமேஷ் தலைமையிலும், தலித் விடுதலை கட்சியினர் மாநில இணை செயலாளர் சகுந்தலா தங்கராஜ் தலைமையிலும், தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினர் மாநில இளைஞர் அணி செயலாளர் மாரி ராஜ்பாண்டியன் தலைமையிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

போக்குவரத்து மாற்றம்

புதிய தமிழகம் கட்சியினர் நெல்லை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றதால் மதியம் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. நெல்லை சந்திப்பில் இருந்து வண்ணார்பேட்டைக்கு சென்ற வாகனங்கள் உடையார்பட்டி, வடக்கு புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

காலையிலும், மாலையிலும் அண்ணா சாலை முதல் வண்ணார்பேட்டை மேம்பாலம் வரை இரு மார்க்கத்திலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையொட்டி மதுரை ரோடு, புறவழிச்சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் தலைமையில், துணை போலீஸ் கமிஷனர் சரவணன், உதவி போலீஸ் கமிஷனர்கள் சதீஷ்குமார், நாகசங்கர், பரமசிவன், கோடிலிங்கம் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Next Story