தொடர் சாரல் மழை எதிரொலி: கம்பம் பள்ளத்தாக்கு பகுதி கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு


தொடர் சாரல் மழை எதிரொலி: கம்பம் பள்ளத்தாக்கு பகுதி கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 25 July 2019 4:15 AM IST (Updated: 25 July 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

தொடர் சாரல் மழை பெய்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கம்பம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கம்பம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி,குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம் உள்ளிட்ட இடங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. இந்த பகுதிகளில் தென்னை, வாழை, வெண்டைக்காய், பீட்ரூட், தக்காளி மற்றும் திராட்சை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கு பெரும்பாலும் கிணற்று பாசனம் மூலம் தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக அந்த பகுதியில் போதிய மழை இல்லாததால் தோட்டப்பயிர்களில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அவற்றின் சாகுபடி வெகுவாக குறைந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதேபோல் கம்பத்தில் உள்ள வீரப்பநாயக்கன் குளத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 More update

Next Story