க.விலக்கு அருகே குடிநீர் கேட்டு அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்


க.விலக்கு அருகே குடிநீர் கேட்டு அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 July 2019 4:30 AM IST (Updated: 25 July 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

க.விலக்கு அருகே குடிநீர் கேட்டு அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சியில் க.விலக்கு அருகே பிராதுகாரன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆழ்துளை கிணறுகள் மற்றும் குன்னூர் வைகை ஆறு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாகவும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் இருந்த 4 ஆழ்துளை கிணறுகளில் 3 ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது. கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் தண்ணீர் சரி வர வழங்கப்படவில்லை. இதனால் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் கிராம மக்கள் தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ராட்சத குழாயில் கசியும் தண்ணீரை, பிடித்து குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 7 மணியளவில் காலிக்குடங் களுடன் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ரெங்கராஜன் சம்பவ இடத்துக்கு வந்தார். அவரை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் பிராதுகாரன்பட்டி-ரோசனபட்டி செல்லும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து க.விலக்கு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமதானப்படுத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் தண்ணீரை சிலர் மின்மோட்டார்கள் மூலம் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் அந்த மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுப்பது தடுக்கப்பட்டு, கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
1 More update

Next Story