பேரகணியில் மது, புகையிலை பயன்பாட்டுக்கு தடை அறிவிப்பு பலகை வைத்த பொதுமக்கள்


பேரகணியில் மது, புகையிலை பயன்பாட்டுக்கு தடை அறிவிப்பு பலகை வைத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 24 July 2019 10:00 PM GMT (Updated: 24 July 2019 6:47 PM GMT)

பேரகணியில் மது, புகையிலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்தனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட படுகர் இளம் பேரவை சார்பில் கோத்தகிரி அருகே உள்ள பேரகணி கிராமத்தில் மது மற்றும் புகையிலை பயன்பாட்டை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதற்கு வக்கீல் முருகன் தலைமை தாங்கினார். பேரவை ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து பேரகணி கிராமத்தின் நுழைவு பகுதியில்,‘ இது குழந்தைகளும், தாய்மார்களும் வாழும் அழகான ஆன்மீக கிராமம். இந்த கிராமத்தில் மது அருந்தவோ, புகை பிடிக்கவோ முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது‘ என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதுகுறித்து படுகர் இளம் பேரவை நிர்வாகிகள் கூறிய தாவது:-

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மது மற்றும் புகையிலை பயன்பாட்டை தடுக்கும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். மேலும் அந்தந்த கிராமங்களில் மது அருந்தவோ, புகை பிடிக்கவோ அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்படும். இதற்கு அந்தந்த கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதேபோன்று அந்த கிராமங்களில் உள்ள கடைகளிலும் சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் உள்ள பேரகணி, கேர்பெட்டா ஆகிய கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக அனைத்து கிராமங்களிலும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story