நல்லதங்காள் ஓடை அணைக்கு அமராவதி ஆற்றில் இருந்து இணைப்பு கால்வாய்; விவசாயிகள் கோரிக்கை


நல்லதங்காள் ஓடை அணைக்கு அமராவதி ஆற்றில் இருந்து இணைப்பு கால்வாய்; விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 July 2019 4:30 AM IST (Updated: 25 July 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

நல்லதங்காள் ஓடை அணைக்கு அமராவதி ஆற்றில் இருந்து இணைப்பு கால்வாய் வெட்ட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலனூர்,

மூலனூர் அருகே பொன்னிவாடி ஊராட்சியில் நல்லதங்காள் ஓடை அணை உள்ளது. இந்த அணையின் நீர்தேக்க பரப்பளவு 774 ஏக்கர் ஆகும். அணையில் 30 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணை மூலம் பொன்னிவாடி, நல்லாம்பாளையம், ஆலாம்பாளையம், பெரமியம், தூரம்பாடி, மூலனூர் ஆகிய கிராமங்களில் 4,744 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.

இந்த அணைக்கட்டிற்கு எல்லா காலங்களிலும் தண்ணீர் வரத்து இருப்பதில்லை. மழைக்காலங்களில் கிடைக்கும் நீர் போதுமானதாக இருப்பதில்லை. இதனால் இந்த அணைக்கட்டு பெரும்பாலான காலங்களில் வறண்டு காணப்படுகிறது.

அணையின் கட்டுமான பணிகள் நடைபெற்ற போது இருந்த மண்திட்டுகள், பாறைகள் பழைய வீட்டு சுவர்கள், பாறைகள் ஆகியவை இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளது. இதனால் அணையில் முழு கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் உள்ளது. அப்படி இந்த அணையை தூர் வாரினால் கூடுதலாக தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

மூலனூர் ஒன்றிய பகுதி மிகவும் வறட்சியானதாகும். இதனால் குடிதண்ணீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புரத்தலாறு அணையில் இருந்து வரும் உபரிநீர் சண்முக நதி மூலம் அமராவதி ஆற்றில் கலக்கிறது. எனவே அமராவதி ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டு நல்லதங்காள் ஓடை அணையுடன் இணைக்க முன்பு திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.

இதனால் நல்லதங்காள் ஓடை அணை தண்ணீரின்றி காணப்படுகிறது. எனவே அமராவதி ஆற்றில் இருந்து நல்லதங்காள் ஓடை அணைக்கு இணைப்பு கால்வாய் வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அணையை தூர்வார வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story