குடும்பத் தகராறில் கணவன்–மனைவிக்கு அரிவாள் வெட்டு


குடும்பத் தகராறில் கணவன்–மனைவிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 25 July 2019 4:00 AM IST (Updated: 25 July 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் குடும்பத் தகராறில் கணவன்–மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. உறவினரும் படுகாயம் அடைந்தார். 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் ராஜாஜி நகரில் வசித்து வருபவர் சரத்குமார் (வயது 25). இவருடைய மனைவி நிவேதா (22). இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

நிவேதாவுக்கு 2 சகோதரிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பெரும்பாக்கம் கண்ணகிநகரில் வசித்து வந்தனர். அப்போது நகை கொடுக்கல் வாங்கலில் நிவேதாவுக்கும், அவரது சகோதரிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த குடும்பத்தகராறு முன்விரோதமாக மாறியது. இதையடுத்து நிவேதா தனது கணவருடன் திருவொற்றியூர் ராஜாஜி நகருக்கு குடி வந்து விட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நிவேதாவின் 2 அக்காள்களின் கணவர்களான ஆனஸ்ட்ராஜ்(32), ஜோதிபாசு(30) இருவரும் நிவேதா வீட்டுக்கு வந்து நகையை கேட்டு மீண்டும் தகராறு செய்தனர்.

அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த ஆனஸ்ட்ராஜ், ஜோதிபாசு இருவரும் சரத்குமார் அவருடைய மனைவி நிவேதா இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் கணவன்–மனைவி இருவரையும் மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தகராறின்போது ஆனஸ்ட்ராஜூக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரும் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story