விருத்தாசலம் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு


விருத்தாசலம் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 July 2019 10:15 PM GMT (Updated: 24 July 2019 7:15 PM GMT)

விருத்தாசலம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதில் அரசு பஸ் சேற்றில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே ஆலிச்சிக்குடி, க.இளமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள ஏரிகளில் வண்டல் மண் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தினசரி ஏராளமான டிராக்டர்களில் வண்டல் மண் அள்ளிச் செல்லப்படுகிறது. அவ்வாறு டிராக்டர்களில் கொண்டு செல்லும் போது வண்டல் மண் சரிந்து சாலையில் கொட்டுகிறது. இதனால் க.இளமங்கலம்-தாழநல்லூர் இடையேயான தார் சாலையே தெரியாத அளவுக்கு வண்டல் மண் படிந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் க.இளமங்கலம் பகுதியில் உள்ள சாலை சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதற்கிடையே தாழநல்லூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் க.இளமங்கலம் சாலையில் வந்த போது திடீரென் பஸ் சக்கரம் சேற்றில் சிக்கியது.

இதனால் டிரைவரால் மேற்கொண்டு பஸ்சை இயக்க முடியவில்லை. இதன் காரணமாக டிரைவர் நடுரோட்டிலேயே பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பஸ்சில் வந்த பயணிகள் இறங்கி, அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்று மாற்று பஸ் மூலமாக தங்கள் ஊர்களுக்கு சென்றனர்.

இதையடுத்து நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் சேற்றில் சிக்கிய பஸ் மீட்கப்பட்டது. பின்னர் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் இருந்த மண்ணை அகற்றினர். அதனை தொடர்ந்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Next Story