கும்மிடிப்பூண்டி அருகே 17 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் சிக்கியது 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே 17 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை வாகன சோதனையின் போது மத்திய புலனாய்வு பிரிவு மது விலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் தமிழக அரசின் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று அதிகாலை திருச்சி மற்றும் மதுரை மண்டல மத்திய புலனாய்வு பிரிவு மதுவிலக்கு இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், ராமராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அரியனாவில் இருந்து ஆந்திரா வழியாக உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்றை அவர்கள் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த லாரியில் உருளைக்கிழங்கு மூட்டைகளுக்கு கீழே 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 500 பிளாஸ்டிக் கேன்களில் மொத்தம் 17 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேற்கண்ட லாரி அரியனா மாநிலம் கூர்கன் என்ற இடத்தில் இருந்து மதுராந்தகம் நோக்கிச்செல்வது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
லாரியுடன் பிடிபட்ட எரிசாராயத்தையும். அதில் வந்த 2 டிரைவர்களையும், மத்திய புலனாய்வு பிரிவு மது விலக்கு போலீசார், கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர்களான புதுச்சேரியைச் சேர்ந்த சூசைராஜ் (வயது54), திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த சத்யராஜ் (30) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.