தோகைமலையில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் நிகழ்ச்சி: 197 பயனாளிகளுக்கு ரூ.47½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


தோகைமலையில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் நிகழ்ச்சி: 197 பயனாளிகளுக்கு ரூ.47½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 25 July 2019 4:30 AM IST (Updated: 25 July 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலையில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் 197 பயனாளிகளுக்கு ரூ.47½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.

தோகைமலை,

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்திற்குட்பட்ட தோகைமலை ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, 197 பயனாளிகளுக்கு ரூ.47 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுவதுமாக அறிந்து கொள்ளவும், அரசின் திட்டங்களை முழுவதுமாக பெறுவதற்கும் பயனாளிகள் எந்தெந்த துறை அலுவலகங்களை அணுக வேண்டும், எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அனைவரும் அறிந்துகொள்ள இம்முகாம்கள் ஒரு வாய்ப்பாக அமைகின்றன. நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது குறித்த அனைத்து தகவல்களையும் சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்களே இங்கு நேரடியாக வருகை தந்து எடுத்துக்கூறி, தங்கள் துறை சார்ந்த திட்ட விளக்க உரைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். பொதுமக்கள் ஒவ்வொருவரும் இங்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத்துறையினர் அரங்குகளை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை கேட்டறிந்து உங்களுக்கு எந்த வகையில் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம்் விரிவாக கேட்டுத்தெளிவு பெற வேண்டும்.

கட்டணமில்லா தொலைபேசி

மேலும், குழந்தைகள் குறித்த பாதுகாப்பு குறித்து 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். 18 வயது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக இளைஞர் நீதி குழுமம் அமைக்கட்டுள்ளது. அரசு வேலை எதிர்பார்ப்பவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் கட்டணமில்லாமல் நடத்தப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையப் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். இவை தவிர வாரந்தோறும் நடத்தப்படும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு தகுதிக்கேற்ற வேலைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிசான் அட்டை

விவசாயிகள் அனைவரும் “கிசான் அட்டை” பெற விண்ணப்பிக்க வேண்டும். எந்தவித பிணையும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடனுதவி வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் விண்ணப்பித்து பயனடைய வேண்டும். பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகள், அநீதிகள் குறித்து புகார் தெரிவிக்க 181 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம். தோகைமலை ஊராட்சியில் பெறப்பட்ட 114 மனுக்களில் 113 மனுக்கள் ஏற்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. ஒரு மனு நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத், உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி, வேளாண் இணை இயக்குனர் ஜெயந்தி, ஆதிதிராவிட நல அலுவலர் லீலாவதி, மாற்றுத்திறாளிகள் நல அலுவலர் ஜான்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா, குளித்தலை வட்டாட்சியர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story