கடைகள், நிறுவன தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் 2 மடங்கு உயர்வு - மராட்டிய அரசு உத்தரவு
மராட்டியத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 2 மடங்கு உயர்த்தி அரசு உத்தரவிட்டு உள்ளது.
மும்பை,
மராட்டிய தொழிலாளர் நலத்துறை மந்திரி சஞ்சய் குதே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மராட்டியத்தில், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கடைகள் மற்றும் நிறுவன தொழிலாளர்களின் சம்பளம் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால் சில தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக சம்பள உயர்வு செய்யப்படவில்லை.
தற்போது கடைகள் மற்றும் நிறுவன தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 2 மடங்கு உயர்த்தி அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி மாநகராட்சி எல்லைப்பகுதியில் திறன்சார்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.5,800-ல் இருந்து ரூ.11,632 ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பகுதி திறன்சார்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10,021 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
நகராட்சி பகுதிகளில் திறன்சார்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.5,500-ல் இருந்து ரூ.11,036 ஆக உயர்த்தப்பட்டது. பகுதி திறன்சார்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.4,700-ல் இருந்து ரூ.9,425 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல அந்தந்த பகுதிக்கு தகுந்தவாறு குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது கடந்த 24-ந் தேதி முதல் அமலுக்கு வந்து விட்டது. இதன் மூலம் 67 வகையான 10 லட்சம் கடைகள் மற்றும் நிறுவனங்களை சேர்ந்த சுமார் 1 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story