மீண்டும் கனமழை கொட்டி தீர்த்தது : வெள்ளக்காடாக மாறிய மும்பை
மீண்டும் கனமழை கொட்டி தீர்த்ததால் மும்பை வெள்ளக்காடாக மாறியது.
மும்பை,
மராட்டியத்தில் பருவமழை பெய்து வருகிறது. கடந்த மாத இறுதியில் தீவிரம் அடைந்த பருவமழை 5 நாட்கள் கொட்டி தீர்த்தது. கனமழையால் மும்பை நகரம் வெள்ளக்காடானது. மழைக்கு கொத்து, கொத்தாக உயிர் பலி ஏற்பட்டது. குறிப்பாக மலாடில் மட்டும் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 31 பேர் வரை பலியானார்கள். அதன்பிறகு மழையின் தீவிரம் குறைந்தது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.
அதன்பின்னர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெரியளவில் மழை பெய்யவில்லை. வெயிலின் தாக்கம் உணரப்பட்டது. இடை, இடையே அவ்வப்போது லேசான மழை பெய்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மும்பையில் மீண்டும் கனமழை பெய்தது.
காலையிலும் தொடர்ந்து பெய்த மழையால் மும்பை நகரின் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. ரெயில் தண்டவாளங்களிலும், சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது. மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் தாமதமாக இயங்கின.
சயான் - குர்லா இடையே தண்டவாளங்களை சூழ்ந்த வெள்ளத்தில் ரெயில்கள் ஆமை வேகத்தில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.
சாலையில் தேங்கிய வெள்ளத்தினால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிங்சர்க்கிள் பகுதியில் கிழக்கு விரைவு சாலையில் அதிகளவில் மழைநீர் தேங்கியது. அதிகாலை நேரத்தில் அந்த வழியாக வந்த 3 அரசு பஸ்கள் அடுத்தடுத்து பழுதாகி நடுவழியில் நின்றன.
அந்த பஸ்களில் இருந்த பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். பல பஸ்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டன.
நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று அதிகாலை 5.30 மணி வரையிலான 21 மணி நேரத்தில் கொலபாவில் 171 மி.மீ. மழை பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ள பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. துல்சி ஏரி மட்டும் நிரம்பி உள்ள நிலையில் மற்ற ஏரிகளும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story