காவிரியில் 7ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 1 அடி உயர்வு


காவிரியில் 7ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 1 அடி உயர்வு
x
தினத்தந்தி 25 July 2019 4:44 AM IST (Updated: 25 July 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு காவிரியில் வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஒரேநாளில் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்தது. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை நீடிக்கிறது.

மேட்டூர்,

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் குறித்த காலத்தில் பெய்யவில்லை. சுமார் ஒரு மாத காலம் தாமதமாக இந்த மாதம் முதல் வாரத்தில் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் மழை தீவிரம் அடைந்தது. இதனால் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அணை பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 18-ந்தேதி முதல் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது.

இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக நேற்று முன்தினம் காலை சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைந்தது.

நேற்று முன்தினம் காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மதியம் வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று முன்தினம் காலை 39.13 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 40.15 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரேநாளில் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து உள்ளது. கர்நாடகத்தில் மழை மேலும் தீவிரம் அடைந்தால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

நேற்று காலையும் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 2-வது நாளாக நீடித்தது.

அருவிக்கு செல்லும் நடைபாதை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று காலை நிலவரப்படி காவிரியில் வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 8,100 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு இருந்தது. தற்போது வினாடிக்கு 2,900 கனஅடி நீர் தமிழகத்திற்கு கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

Next Story