இரணியல், குலசேகரம் போலீஸ் நிலையத்தில் ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்


இரணியல், குலசேகரம் போலீஸ் நிலையத்தில் ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்
x
தினத்தந்தி 26 July 2019 4:15 AM IST (Updated: 25 July 2019 8:38 PM IST)
t-max-icont-min-icon

இரணியல், குலசேகரம் போலீஸ் நிலையத்தில் ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.

இரணியல்,

இரணியல் பொட்டல்குழி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் கவிதா (வயது 23), என்ஜினீயர். இவர் கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். தற்போது, திங்கள்சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று வேலைக்கு சென்ற கவிதா வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் மாயமான கவிதாவை போலீசார் தேடி வந்தனர்.

போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கவிதா தனது காதலன் கார்த்திக்குடன் இரணியல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர் போலீசாரிடம், தான் கோவையில் வேலை பார்த்த போது, அதே நிறுவனத்தில் வேலை பார்த்த கார்த்திக் என்பவரை காதலித்து வந்ததாகவும், இதனால் வீட்டை விட்டு வெளியேறி அவரையே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார்.

இதையடுத்து போலீசார், இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து வைத்து அனுப்பினர்.

குலசேகரம் அருகே பொன்மனை பெருவழிக்கடவு பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா பானு (19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் குலசேகரம் காவஸ்தலம் பகுதியை சேர்ந்த மனாப் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு ஆயிஷா பானுவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்கள், போலீசாரிடம் தாங்கள் 2 பேரும் தீவிரமாக காதலிப்பதாகவும், தங்களை சேர்த்து வைக்குமாறு கெஞ்சினர்.

இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை சேர்த்து வைத்து அனுப்பினர்.

Next Story