விழுப்புரத்தில் பரபரப்பு: ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் வீட்டில் நகை திருட்டு மற்றொரு வீட்டில் கொள்ளையை தடுக்க முயன்றவர் மீது தாக்குதல்


விழுப்புரத்தில் பரபரப்பு: ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் வீட்டில் நகை திருட்டு மற்றொரு வீட்டில் கொள்ளையை தடுக்க முயன்றவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 26 July 2019 4:00 AM IST (Updated: 25 July 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் வீட்டில் நகை திருட்டு போனது. மற்றொரு வீட்டில் நடக்க இருந்த கொள்ளையை தடுக்க முயன்றவர் தாக்கப்பட்டார்.

விழுப்புரம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விழுப்புரம் தந்தை பெரியார் நகர் யமுனை சதுக்கம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60), ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் நேற்று அதிகாலை சேகருடைய வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவை கள்ளச்சாவி மூலம் திறந்து அதிலிருந்த ½ பவுன் நகையை திருடினார். பின்னர் அந்த மர்ம நபர் சேகர் வீட்டின் எதிரே உள்ள மற்றொரு ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியரான பாலசுப்பிரமணியன் (62) என்பவருடைய வீட்டின் முன்பக்க கதவு தாழ்ப்பாளை நெம்பி திறக்க முயன்றார்.

இந்த சத்தம் கேட்டதும் பாலசுப்பிரமணியன், வீட்டில் இருந்து கதவைத் திறந்து வெளியே வந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் இரும்புக்கம்பியுடன் நின்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், திருடன்... திருடன் என கூச்சலிட்டபடி அந்த நபரை பிடிக்க முயன்றார். உடனே அந்த நபர், தான் வைத்திருந்த இரும்புக்கம்பியால் பாலசுப்பிரமணியனின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் பாலசுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து அவர் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகா‌‌ஷ், விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் காயமடைந்த பாலசுப்பிரமணியன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story