தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் சிறு வாய்க்கால்களில் மழைநீர் தேங்க பள்ளம் தோண்டும் பணி விவசாயிகள் வரவேற்பு


தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் சிறு வாய்க்கால்களில் மழைநீர் தேங்க பள்ளம் தோண்டும் பணி விவசாயிகள் வரவேற்பு
x
தினத்தந்தி 25 July 2019 10:45 PM GMT (Updated: 25 July 2019 7:20 PM GMT)

பூதலூர் ஒன்றிய பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் சிறு வாய்க்கால்களில் மழைநீர் தேங்க வசதியாக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் சாலை ஓர முட்புதர்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு மாற்றாக சிறு பாசன வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அதன்படி தற்போது பாசன வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் சிறு வாய்க்கால் களில் மழைநீர் தேங்கும் வண்ணம் 6 அடி நீளமும் 2 அடி அகலமும் 1½ அடி ஆழமும் கொண்ட பள்ளங்கள் அடுத்தடுத்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வாய்க்கால்களில் பள்ளம் தோண்டி ஆழப்படுத்தப்படுவதால், ஆறுகளில் தண்ணீர் வரும் போது எளிதில் வயல்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இந்த பணிகளுக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பூதலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

சிறு வாய்க்கால்களில் அடுத்தடுத்து பள்ளங்கள் தோண்டப்படுவது வரவேற்கத்தக்கது. மழைநீர் தேங்கி நிற்க இது வழிவகுக்கும்.

வாய்க்காலில் தண்ணீர் வரும்போது அடுத்தடுத்து உள்ள 2 பள்ளங்களுக்கு இடையே உள்ள மேடு பகுதியை மட்டும் அகற்றி விட்டால், வாய்க்காலை முழுமையாக தூர்வாரியதுபோல் ஆகும். மேலும் விரைந்து தண்ணீர் பாய்ந்தோடி கடைமடை வயல்களுக்கும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story