செஞ்சி அருகே திறந்தவெளி கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்


செஞ்சி அருகே திறந்தவெளி கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 July 2019 10:00 PM GMT (Updated: 25 July 2019 7:24 PM GMT)

செஞ்சி அருகே திறந்த வெளி கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செஞ்சி, 

செஞ்சி அடுத்துள்ளது அனந்தபுரம் பேரூராட்சி. இப்பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் 2 இடங்களில் திறந்த வெளி கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் ஒரு கிணறு பனமலை ஏரியில் உள்ள அனந்தபுரம் பேரூராட்சி எல்லை பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று காலையில் கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. இதுபற்றி அறிந்த பனமலை கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்கு வந்து எங்கள் ஊர் ஏரிப்பகுதியில் கிணறு வெட்டக்கூடாது என்று கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனந்தபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்தீப் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிணறு அமைக்கும் இடம் அனந்தபுரம் பேரூராட்சியில் தான் உள்ளது என்று கூறினார். இருப்பினும் அதை ஏற்காத கிராம மக்கள், அங்கு கிணறு அமைக்கக்கூடாது என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு கிணறு அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் கிணறு வெட்டும் பணியை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தொடர்ந்து கிணறு வெட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி செயல்அலுவலர் ஷேக்லத்தீப் அனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திறந்த வெளி கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story