அரசு பள்ளிகளை நூலகங்களாக மாற்றும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
அரசு பள்ளிகளை நூலகங்களாக மாற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை,
சிவகங்கையில் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தலைமையிலும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளருமான சங்கர் முன்னிலையிலும் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019-ன் மீது கருத்து தெரிவிக்க குறுகியகால அவகாசமே உள்ளதால் ஆசிரியர்கள் தங்களது கருத்துகளை மின்னஞ்சல் வழியில் உடனடியாக அனுப்ப வேண்டும்.
புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் பங்கேற்கும் கல்வி கருத்தரங்கை ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி சிவகங்கையில் நடத்துவது என்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை பலன்கள் கல்வி அலுவலகங்களில் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதை முதன்மைக்கல்வி அலுவலர் தலையிட்டு சிறப்பு முகாம் நடத்தி சரி செய்ய வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஏழை கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி அரசு பள்ளிகளை நூலகங்களாக மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் சுரேஷ்கண்ணா, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத்தலைவர் ஜெயசங்கர், தலைமையிட செயலாளர் முத்துச்சாமி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தவமணி செல்வம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் பீட்டர் உள்படமாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story