உச்சிப்புளி கடற்படை தளத்தில் இருந்து சென்று வெளிநாட்டு கப்பல்களை கண்காணிக்கும் ஆள் இல்லாத உளவு விமானங்கள்
உச்சிப்புளி கடற்படை தளத்தில் இருந்து சென்று வெளிநாட்டு கப்பல்களை கண்காணிக்கும் பணியில் ஆள் இல்லாத உளவு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் ஐ.என்.எஸ்.பருந்து இந்திய கடற்படை விமான தளம் செயல்பட்டு வருகிறது. இந்த கடற்படை விமான தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும் மற்றும் 2 ஆள் இல்லாத விமானங்களும் ராமேசுவரம், மண்டபம், தொண்டி, தனுஷ்கோடி உள்பட மாவட்டம் முழுவதும் மற்றும் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கார்கில் வெற்றி தினத்தையொட்டி உச்சிப்புளியில் செயல் பட்டு வரும் பருந்து விமான தளத்தை பார்வையிட நேற்று ஒரு நாள் மட்டும் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி பருந்து கடற்படை கமாண்டிங் அதிகாரி வெங்கடேஷ் ஆர்.அய்யர் உத்தரவின் பேரில் கடற்படை ஹெலிகாப்டர் மற்றும் ஆள் இல்லாத 2 உளவு விமானங்களும் விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் கடற்படை வீரர்கள் பயன்படுத்தும் சிறிய,பெரிய ரக துப்பாக்கிகளும், சில ஆயுதங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. அங்கு வந்த பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் ஆள் இல்லாத உளவு விமானம், ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களை பார்த்து ரசித்தனர். ஏராளமானோர் விமானம், ஹெலிகாப்டர் முன்பு நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். விமானம், ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகள் குறித்து கடற்படை வீரர்கள் பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இது பற்றி கடற்படை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பருந்து கடற்படை விமான தளத்தில் 2 ஹெலிகாப்டர்களும் மற்றும் 2 ஆள் இல்லாத உளவு விமானங்களும் பாதுகாப்பு பணிக்காக உள்ளன. ஆள் இல்லாத உளவு விமானங்கள் வங்காள விரிகுடா கடலில் வெளிநாட்டு கப்பல்களின் அத்துமீறலை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஆள் இல்லாத உளவு விமானம் அதிவேகத்தில் பறக்க கூடியதுடன் வானில் இருந்து 10 ஆயிரம் அடி வரையிலும் கீழே உள்ள பொருட்களை துல்லியமாக படம் பிடித்து காட்டும் சிறப்பு வாய்ந்தது. 2 ஆள் இல்லாத விமானங்களுமே பருந்து கடற்படை தளத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story