திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ரூ.50 லட்சத்தில் தனி அறைகள்


திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ரூ.50 லட்சத்தில் தனி அறைகள்
x
தினத்தந்தி 26 July 2019 4:30 AM IST (Updated: 26 July 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ரூ.50 லட்சத்தில் கட்டில், மெத்தை வசதியுடன் தனி அறைகள் கட்டப்பட்டு உள்ளது.

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனை சுமார் ரூ.100 கோடி செலவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நீரிழிவு, இதய நோய்கள் உள்பட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவ பிரிவுகள் உள்ளன. இதுதவிர மகப்பேறு பிரிவில் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகள் பிரிவில் தங்கி சிகிச்சை பெறும் தாய்மார்களும் அதிக அளவில் உள்ளனர். மேலும் விபத்துகளில் சிக்கி காயம் அடைபவர்கள், தீக்காயம் அடைந்தவர்களும் உள் நோயாளி களாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தங்க இடம் இல்லை

இப்படி சிகிச்சை பெறும் நோயாளிகளை கவனித்துக்கொள்வதற்காக வரும் அவர்களது உறவினர்கள் அல்லது உதவியாளர்கள் தற்போது தங்குவதற்கு இடம் இல்லாமல் மருத்துவமனை உள் வளாகத்தின் நடைபாதைகள் மற்றும் மரத்தடிகளிலும் தான் தங்கவேண்டியது உள்ளது. அப்படி தங்கும்போது இரவு நேரங்களில் அவர்களது செல்போன் மற்றும் உடைமைகள் திருட்டு போய் விடுகின்றன. மேலும் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

தனி அறைகள்

இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் புறக்காவல் நிலையம் அருகில் மாநகராட்சி சார்பில் தனித்தனி அறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. ரூ.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் கட்டில், மெத்தை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. கழிப்பறை, நவீன குளியலறை மற்றும் பொருட்கள் வைப்பதற்காக லாக்கர் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறைகளில் ஒரு நாள் தங்குவதற்கான கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படும். விரைவில் இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story