திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெற்கு மண்டலத்துக்கு மாற்றம்


திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெற்கு மண்டலத்துக்கு மாற்றம்
x
தினத்தந்தி 25 July 2019 10:45 PM GMT (Updated: 25 July 2019 10:37 PM GMT)

திருமணம் செய்து அடித்து துன்புறுத்தியதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெற்கு மண்டலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் மணிமொழி (வயது 55). இவர் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் மீது கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த பிரதீமா என்கிற ராணி (32) திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

அதில் இன்ஸ்பெக்டர் மணிமொழி, தனது முதல் மனைவி இறந்த பிறகு கடந்த 2014-ம் ஆண்டு முதல் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், தன்னை கடந்த 2018-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும், இந்த நிலையில் பெருமாநல்லூரை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது குறித்து கேட்டதற்கு தன்னை அடித்து, உதைத்து மிரட்டல் விடுத்தார் என்றும் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் மணிமொழி கூறும்போது, பிரதீமாவுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்ததாகவும், அந்த பெண்ணின் நடவடிக்கை சரியில்லை என்பதை கண்டித்ததால் தனது வீட்டில் இருந்த நகை மற்றும் ஆவணங்களை எடுத்துச்சென்று விட்டதாகவும், ரூ.1 கோடி மற்றும் சொத்தில் பங்கும் கேட்டு, அதை கொடுக்க மறுத்ததால் தன் மீது அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார் என்றார்.

மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா இதுதொடர்பாக, திருப்பூர் வடக்கு உதவி கமிஷனரை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் பிரதீமா மற்றும் இன்ஸ்பெக்டர் மணிமொழி ஆகியோரிடம் போலீஸ் உதவி கமிஷனர்(பொறுப்பு) சுரேஷ் விசாரணை நடத்தினார்.

விசாரணை முடிந்து வெளியே வந்த பிரதீமா கண்ணீர் விட்டு கதறி அழுததுடன் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி ஆவேசமடைந்து அங்கு நிறுத்தியிருந்த கார் கண்ணாடியையும் அடித்து சேதப்படுத்தி னார். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணை அறிக்கையை போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தார். மேலும் இன்ஸ்பெக்டர் மணிமொழியை திருப்பூர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று மதியம் இன்ஸ்பெக்டர் மணிமொழியை தமிழ்நாடு காவல்துறையில் தெற்கு மண்டலத்துக்கு மாற்றம் செய்தும், அவர் உடனடியாக தெற்கு மண்டலத்துக்கு செல்ல வேண்டும் என்றும் போலீஸ் டி.ஜி.பி.திரிபாதி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story