மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா


மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா
x
தினத்தந்தி 25 July 2019 10:00 PM GMT (Updated: 25 July 2019 10:49 PM GMT)

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

மடத்துக்குளம், 

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் சோழமாதேவி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி, மைவாடி, வேடபட்டி, கொழுமம், பாப்பான்குளம் ஆகிய 11 ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருமண உதவித்தொகை, 100 நாள் வேலை, பொது சுகாதாரம், தெருவிளக்குகள் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு, கால்வாய் வசதி போன்ற பல்வேறு தேவைகளுக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால் வேலை அலுவலக நாட்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களின் வருகை அதிகமாக இருக்கும்.

எனவே பொதுமக்களின் நலன் கருதியும், அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் ஆவணங்களை பாதுகாக்கவும், வெளி ஆட்கள் மற்றும் மர்ம நபர்கள் அலுவலகத்தில் நுழையாமல் இருக்கவும், அவர்களை கண்காணிக்கவும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் முக்கிய கோப்புகள் இருப்பு வைக்கும் இடம், முன்பக்கம், பின்பக்கம், அலுவலக வளாகம், போன்ற பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை அலுவலகத்தில் ஒரு அறையில் கண்காணிக்கவும் மானிட்டர் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி (கிராம ஊராட்சிகள்) கூறும்போது “ மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு இடைத்தரகர்களாக வேலை செய்யும் நபர்கள், கேமரா பொருத்தப்பட்டுள்ள காரணத்தால் தடுக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தொடர்ந்து தங்களது அடிப்படை தேவைகளை யாருடைய தலையீடும் இன்றி நேரடியாகவும் பாதுகாப்பாகவும் வந்து செல்ல கண்காணிப்பு கேமரா பெரிதும் உதவும்” என்றார்.

Next Story