கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை: பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை சேலம் கோர்ட்டு தீர்ப்பு


கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை: பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 25 July 2019 10:30 PM GMT (Updated: 25 July 2019 10:59 PM GMT)

கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மற்றொரு பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சேலம், 

சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 50). இவர்களது மகன் பூபதி. இவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள். அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம். இவரது மனைவி செல்வி (48). பூபதி, செல்வியிடம் கந்து வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இதற்கான வட்டியை அவர் மாதாமாதம் கட்டி வந்து உள்ளார்.

பூபதி, வட்டி மட்டும் லட்சக்கணக்கில் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3.3.2012 அன்று செல்வி, சின்னபொண்ணு வீட்டிற்கு சென்று உனது மகன் வாங்கிய கடனை திருப்பி கொடு, இல்லை என்றால் அதற்காக ரூ.15 லட்சத்திற்கு பத்திரம் எழுதி கொடு என்று கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சின்னபொண்ணு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வியை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட அனைத்து மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட செல்விக்கு, 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.

Next Story