புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கோரி பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்


புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கோரி பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 26 July 2019 5:51 AM IST (Updated: 26 July 2019 5:51 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் தொடர் உண்ணா விரத போராட்டம் நடத்தினார்கள்.

காலாப்பட்டு,

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பல்கலைக்கழகத்துக்கு இலவச பஸ் வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறுகோரிக்கைகளை பல்கலைக்கழக மாணவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பல்கலைக்கழக 2-வது நுழைவு வாயில் முன்பு மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். போராட்டத்துக்கு பல்கலைக்கழக மாணவர் பேரவை துணைத் தலைவர் சோனிமா, செயற்குழு உறுப்பினர் பாரதி ஆகியோர் தலைமை தாங்கினர்கள். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த போராட்டம் குறித்து பல்கலைக்கழக மாணவர் பேரவை துணைத் தலைவர் சோனிமா கூறியதாவது:-

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்கும் உள்ளூர் மாணவர்களுக்கு கடந்த காலங்களில் இலவச பஸ் வசதி செய்து தரப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கட்டமமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்கள் போராட்டத்தையொட்டி பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு காலாப்பட்டு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story