ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவோம்


ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவோம்
x
தினத்தந்தி 27 July 2019 3:45 AM IST (Updated: 27 July 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை போராட்டம் மூலம் தடுத்து நிறுத்துவோம் என்று தென்மேற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் ஏ.எம்.டிகுரூஸ் தர்மபுரியில் கூறினார்.

தர்மபுரி,

தென்மேற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் தொழிற்சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் தர்மபுரி ரெயில் நிலைய வளாகம் முன்பு நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்மேற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் ஏ.எம்.டிகுரூஸ் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரெயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதை எங்கள் தொழிற்சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரெயில்வே மந்திரியை சந்திக்க சென்றோம். அப்போது வருகிற ஆகஸ்டு மாதம் 28, 29-ந்தேதிகளில் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கான தேர்தலுக்கு பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்தனர்.

அண்மையில் நடத்திய போராட்டம் காரணமாக ரெயில்வே துறை தனியார் மயம் இல்லை என தற்காலிகமாக அறிவித்து உள்ளனர். ரெயில்வே தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. 7-வது ஊதியக்குழுவின் அறிவிப்பின்படி குறைந்த பட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ரெயில்வே துறையில் உள்ள 3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தற்போது நடைபெற உள்ள தொழிற்சங்க தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை போராட்டம் மூலமாக தடுத்து நிறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்களை ரெயில்வே தொழிலாளர்களுக்கு அவர் வழங்கினார். இந்த கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், ரெயில்வே ஊழியர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story