அரசு மருத்துவக்கல்லூரியில் மஞ்சள் காமாலை நோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்


அரசு மருத்துவக்கல்லூரியில் மஞ்சள் காமாலை நோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்
x
தினத்தந்தி 27 July 2019 3:11 AM IST (Updated: 27 July 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் மஞ்சள் காமாலை நோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

நாகர்கோவில்,

உலக மஞ்சள் காமாலை தினம் ஆண்டுதோறும் ஜூலை 28-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி இரைப்பை, குடல்நோய் மருத்துவத்துறை மற்றும் பொது மருந்துத்துறை ஆகியவற்றின் சார்பில் உலக மஞ்சள் காமாலை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று கல்லூரியில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடந்தது.

கல்லூரி டீன் பாலாஜி நாதன் தலைமை தாங்கி, மஞ்சள் காமாலை நோய் குறித்து பேசினார். ஆஸ்பத்திரி சூப்பிரண்டு பிரின்ஸ் பயஸ், கல்லூரி இரைப்பை மற்றும் குடல்நோய் துறை தலைவர் பாப்பி ரிஜாய்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) மற்றும் இரைப்பை, குடல்நோய் மருத்துவத்துறை தலைவர் ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மதுரை அரசு மருத்துவக்கல்லூரி இரைப்பை மற்றும் குடல்நோய் மருத்துவத்துறை உதவி பேராசிரியர் ரமணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

‘ஹெபடைடிஸ்‘ என்று சொல்லக்கூடிய மஞ்சள் காமாலை நோய் நிறைய பேருக்கு உள்ளது. இதுபோன்ற நோய்கள் ஊசி மூலம் போதை மருந்து ஏற்றி கொள்பவர்களுக்கும், ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்தும் போதும் இந்த நோய் தாக்குதல் ஏற்படுகிறது. இந்த நோய் தாக்குதல் நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கிறது.

இந்த நோயை தடுக்க சிறுகுழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்த நோய் ஏற்படாமல் தடுக்கலாம். நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு ரத்த பரிசோதனையில் ‘எச்.பிஎஸ்- ஏஜி பாசிட்டிவ்‘ என காட்டும். அப்படி பட்டவர்களுக்கு நோய் கிருமி இருக்கும். ஆனால் மஞ்சள் காமாலை வராது. இப்படி பட்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது.

‘ஹெபடைடிஸ்‘ ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்தால் 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக மாத்திரைகள் சாப்பிட வேண்டும். இந்த மாத்திரைகளை வெளியே வாங்கினால் ஒரு மாதத்துக்கு மட்டுமே ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் இலவசமாக கிடைக்கும்.

2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் தொடர்ந்து சாப்பிட்ட பிறகு ரத்தத்தை பரிசோதனை செய்தால் ‘எச்.பிஎஸ்.- ஏஜி நெகட்டிவ்‘ ஆகும். மருந்து மாத்திரை சாப்பிடாமல் இந்த நோய் முற்றினால் கல்லீரல் சுருங்கி மரணம் நேரிட வாய்ப்புள்ளது. இந்த நோயால் அதிகமானோர் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு ரமணி பேசினார்.

கருத்தரங்கில் முன்னாள் டீன் ராதாகிருஷ்ணன், பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரி துறை பேராசிரியர்கள், டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story